கர்நாடகத்தில் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை
கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் வனப்பகுதி, வனவிலங்குகளை பொசுக்கும் காட்டுத்தீயை தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் எழில் கொஞ்சும் அளவுக்கு வனப்பகுதிகளையும், 50-க்கும் மேற்பட்ட ஆறுகளையும் கொண்டுள்ளது. மேலும் மாநிலத்தின் தென்பகுதியில் அரபிக்கடலும் ஆர்ப்பரிக்கிறது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 791 கிலோ மீட்டர் பரப்பளவில் மாநிலம் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது.
தமிழ்நாடு, தெலுங்கானா, மராட்டியம், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் அண்டையில் உள்ளன. குடகு மாவட்டம் மடிகேரி அருகே பாகமண்டலா அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகி தமிழகம் வழியாக பாய்ந்தோடி பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கர்நாடகத்தின் மொத்த பரப்பளவில் 23 சதவீதம் வனப்பகுதியாகும். அதாவது 38 ஆயிரத்து 720 கிலோ மீட்டரில் வனப்பகுதி அமைந்துள்ளது.
வனச்சரணாலயங்கள்
இதில் பந்திப்பூர், நாகரஒலே, பன்னரகட்டா, குதிரே முகா உள்பட 5 தேசிய வன உயிரியல் பூங்காக்களும், காவேரி, பிளிகிரி ரங்கநாத சாமி, பத்ரா, தண்டேலி, மேல்கோட்டை கோவில், புஷ்பகிரி, ராணிபென்னூர், சோமேஸ்வரா, தலக்காவிரி உள்பட 19 வனவிலங்கு சரணாலயங்களும், 11 பறவைகள் சரணாலயங்களும் உள்ளன.
நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மீதமுள்ள வனப்பகுதியை காக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை உருவாக்கி வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கோடை காலங்களில் வனப்பகுதிகளில் வளர்ந்து நிற்கும் மூங்கில் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி உருவாகி காட்டுத்தீ ஏற்படுகிறது. மற்றொரு புறம் சுற்றுலா பயணிகள், விறகு, மூலிகை தேடி செல்வோரின் அலட்சியத்தாலும் காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கரில் வனப்பகுதிகள் தீக்கிரையாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. எப்போதும் ஏப்ரல் மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தற்போதே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகள் காய்ந்து சருகாகி வருகின்றன. அதுபோல் வனவிலங்குகளும் இரை கிடைக்காமலும், குடிநீர் தேடியும் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது.
காட்டுத்தீ
இந்த வகையில் கடந்த வாரம் முதல் கர்நாடக வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 17-ந்தேதி ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகாவில் மாரனஹள்ளி அருகே நித்திகேகூடு வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயை அணைக்க போராடிய வனத்துறையினர் 4 பேர் உடல் கருகினர். அந்த அளவுக்கு காட்டுத்தீ தனது கோர முகத்தை காட்டி 20-க்கும் அதிகமான ஏக்கரில் வனப்பகுதியை அழித்துவிட்டது. இதில் ஒரு வனத்துறை ஊழியர் பலியான சோகமும் அரங்கேறியது.
மைசூரு மாவட்டம் நாகரஒலே வனப்பகுதியில் 20 ஏக்கரில் வனப்பகுதியும், சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து ஹாசன் செல்லும் வழியில் உள்ள சார்மடி மலைப்பகுதியில் 15 ஏக்கரில் வனப்பகுதியும், சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ள குதிரேமுகா வனப்பகுதியில் 15-க்கும் அதிகமான ஏக்கரில் வனப்பகுதியும் காட்டுத்தீ ஏற்பட்டதில் அழிந்துபோய்விட்டன. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் அரிய வகை மூலிகை செடிகளும், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரங்கள் மட்டும் கருகவில்லை. வனவிலங்குகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
தீத்தடுப்பு நடவடிக்கை
இவ்வாறு ஆண்டுதோறும் கோடை காலத்தில் காட்டுத்தீ என்பது வனப்பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் கோடை காலம் தொடங்கியதும் வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைத்து வருகிறார்கள். அதாவது, வனப்பகுதியில் குறிப்பிட்ட தூரத்தில் வனப்பகுதியில் புற்கள், செடி, கொடிகளை அகற்றி தீ ஏற்பட்டாலும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்கள். அதையும் மீறி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
மிகப்பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டால் ராணுவ விமானங்கள் மூலம் பெரிய தொட்டியில் தண்ணீர் மற்றும் மணல் எடுத்துச் சென்று தீ ஏற்பட்ட பகுதியில் கொட்டியும் தீத்தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் சிறிய அளவில் அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படும் போது அதை அணைக்க வனத்துறையினர் உயிரை பணயம் வைக்கும் நிலை உள்ளது. எனவே கோடை தொடங்குவதால் முன்எச்சரிக்கையாக காட்டுத்தீ பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், வன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாறு:-
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
பெங்களூரு ஜெயநகர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அறக்கட்டளையின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டேவிட் கூறியதாவது:-
நாம் மரங்களை பாதுகாப்பது முக்கியமானது. நாங்கள் எங்கெங்கு தேவையோ அங்கு மரக்கன்றுகளை நட்டு அதை வளர்க்கவும் செய்கிறோம். காடுகளில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். கோடை காலத்தில் அங்கு தீ ஏற்பட்டு அதிகளவில் மரங்கள் நாசமாகின்றன. காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அதாவது காடுகளில் சில வகையான மரங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய வகையை சேர்ந்தவையாக உள்ளது. அத்தகைய மரங்களின் கிளைகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது, எளிதில் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டுவிடுகிறது. மேலும், பொதுமக்கள் காட்டு பகுதியில் சிகரெட் பிடிக்கும்போது, அதை அணைக்காமல் அப்படியே காட்டில் வீசி விடுகிறார்கள். இதனால் எளிதில் தீப்பிடித்து காட்டுத்தீ ஏற்படுகிறது. இதுகுறித்து காட்டை ஒட்டிய பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி சிகரெட் துண்டுகளை காட்டில் வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும். காடுகளின் பாதுகாப்பதின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு டேவிட் கூறினார்.
காட்டுத்தீயால் நன்மையும் இருக்கிறது
ெபங்களூரு பசவனகுடியை சேர்ந்த வன ஆர்வலர் கார்த்திக்குமார் கூறியதாவது:-
மாநிலத்தில் தற்போதே கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காட்டுத்தீ ஏற்படுவதால் மரங்கள் மட்டும் அழிவதுவில்லை. காடுகளில் உள்ள விலங்குகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. அதனால் முடிந்தவரை காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க நாம் முற்பட வேண்டும். வன விலங்குகள் காடுகளை விட்டு உணவு, நீர் தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் காடுகளை ஒட்டியுள்ள கிராமப்புற மக்களை தீ வைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் மரங்கள் அழிந்து, அடர்ந்த வனம் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் காட்டுத்தீ, ஏற்படுவதால் வயதான பழைய மரங்கள் கருகி சாம்பலாகும். அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகள் நடலாம். அல்லது மரங்களுக்கான விதைகளை தூவிவிடலாம். காட்டுத்தீ ஏற்படுவதால் இழப்பு அதிகம் என்றாலும், அதனால் நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இவ்வாறு கார்த்திக்குமார் கூறினார்.
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சந்தவேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி சோமசேகர் கூறுகையில், "கோடை காலம் தொடங்கிவிட்டதால் மாவட்டத்தில் குதிரேமுகா, சார்மடி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீ மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் ஏற்படுகிறது. இதை தடுக்க வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் வரையப்படுகிறது. இருப்பினும் வேட்டை கும்பல், சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் சமையல் செய்வது, சிகரெட் புகைத்துவிட்டு தீயை அணைக்காமல் விடுவதால் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதை தடுக்க வனப்பகுதிகளில் வனத்துறையினர் கோடை காலத்தில் ரோந்துப் பணியையும், கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். வனப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சில சமயங்களில் விளைநிலங்களுக்கும் பரவி விடுகிறது. எனவே வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விளை நிலங்கள் அருகே தீத்தடுப்பு கோடுகள் உருவாக்க வேண்டும்" என்றார்.
நவீன கருவிகள் வாங்க வேண்டும்
சிக்கமகளூரு மாவட்ட வனத்துறை அதிகாரி கிரான்தி கூறுகையில், "சிக்கமகளூரு மாவட்டத்தில் வனப்பகுதி அருகே இருக்கும் விளை நிலங்கள் வைத்துள்ள விவசாயிகள் காய்ந்த இலைகளுக்கு தீவைத்தால் வனப்பகுதியில் பிடிக்கும் தீ விவசாய நிலத்துக்கு வராது என்பதற்காக பகல் வேளையில் விட்டுவிட்டு இரவு நேரத்தில் இருக்கும் காய்ந்த இலைகளுக்கு தீ வைப்பதாலேயே காட்டுக்குள் தீ ஏற்படுகிறது. பகல் நேரத்தில் தீப்பிடித்தால் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறையினர் அணைத்து விடுவார்கள். இரவில் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பது கடினம். காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வன ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் தீயணைப்பு படையினர் பயிற்சி அளித்து வருகிறார்கள். வனப்பகுதியில் அத்துமீறி நுழைவோர், வேட்டை கும்பல்களை கண்காணிக்க வனப்பகுதிகளிலேயே வனத்துறையினர் கூடாரம் அமைத்து தங்கியிருந்து வருகிறார்கள்" என்றார்.
மைசூரு உத்தனபுராவை சேர்ந்த வன ஆர்வலர் எம்.டி.யோகேஷ் குமார் கூறுகையில், "வனப்பகுதியில் தற்செயலாக தீப்பிடிப்பது குறைவு தான். 99 சதவீதம் காட்டுத்தீ ஏற்படுவது மக்களால் தான். காடுகளில் தீ பிடிப்பதை தடுக்க வேண்டும் என்றால் காட்டு பகுதிகளின் அருகில் உள்ள கிராமங்களின் மக்கள், வனத்துறையினருடன் கைகோர்த்து செயல்பட வேண்டும். வனத்துறையினர் சபாரி செல்லும் பாதைகளில், அல்லது வாகனங்கள் நடமாடும் சாலைகளில் மட்டும் தீத்தடுப்பு கோடுகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அடர்ந்த காட்டுக்குள்ளே முக்கியமான இடங்களில் தீத்தடுப்பு கோடு உருவாக்குவது இல்லை. இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்திலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த உபகரணங்கள் இல்லை. எனவே வனப்பகுதிகளில் ஏற்படும் தீயை அணைக்க நவீன கருவிகளை வாங்க அரசு முன்வர வேண்டும். மனிதர்கள் வாழவும் வனமும், வனவிலங்குகளும் முக்கியம். இதை நாம் மறக்ககூடாது" என்றார்.
சிவமொக்கா அருகே காடிகொப்பாவை சேர்ந்த வன ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், "தற்போது சுற்றுலா பயணிகள், வேட்டை கும்பலால் தான் பெரும்பாலான காட்டுத்தீக்கு காரணம். கோடை காலத்தில் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல வனத்துறை தடை விதித்தால் நல்லது. மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி மக்கள் மத்தியில் வனத்தை பாதுகாப்பது பற்றி விழுப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கலாம். காட்டுத்தீயை அணைக்க செல்லும் வனத்துறையினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கோடை காலத்தில் வனப்பகுதியில் காய்ந்த சருகுகளை ஒன்று சேர்ந்து குழி தோண்டி புதைத்து உரமாக்கி விற்கலாம்" என்றார்.
வன பாதுகாவலர் கருத்து
மைசூரு மண்டல வன பாதுகாவலர் கரிகாலன் கூறுகையில், கர்நாடகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. இதனால் வனப்பகுதிகளில் கண்காணிப்பு பணியையும், ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்தியுள்ளோம். தற்போது காட்டுக்குள் 24 மணி நேரமும் பணியில் உள்ள வனத்துறை உள்ளனர். நாங்கள் கிராம பஞ்சாயத்து, வருவாய்த்தறை, தீயணைப்பு துறையுடன் இணைந்து தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்கிறோம். தற்போது வனப் பகுதியில் பொறுத்தவரை இயற்கையாக தீப்பிடிப்பது குறைந்துவிட்டது. இருப்பினும் செயற்கையாக ஒரு சில இடங்களில் உருவாகலாம். இருப்பினும் அதனை நாங்கள் கட்டுப்படுத்த தயார் நிலையில் தான் உள்ளோம். காட்டுத்தீயை தடுக்க தீயணைப்பு தொட்டிகள், டேங்கர்கள் உள்ளன. போதிய அளவு வன ஊழியர்களும், வேட்டைத்தடுப்பு காவலர்களும் உள்ளனர்.
காட்டுக்குள் தீப்பிடித்தது பற்றி தகவல் வந்த உடனே வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் அங்கு சென்று தீயை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள். காட்டுத்தீயை அணைக்க தீயணைக்கும் சிலிண்டர் மூலமும், தண்ணீரை ஊற்றியும், பச்சிலை கொண்ட மரக்கிளைகளாலும் தீயை அணைப்பார்கள். வழிப்பாதை உள்ள பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டால் டேங்கர் லாரி மூலமும் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கிறோம். மேலும் தீ அணைப்பதற்கு முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப சுலபமான வழியையும் கடைப்பிடிக்கிறோம். அதாவது காட்டுத்தீ ஏற்பட்ட இடத்தின் எதிர்புறமும் தீபற்ற வைத்து தீயை அணைக்கும் நடவடிக்கையும் கையாளுகிறோம். இ்வ்வாறு செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் தீப்பிடித்து எரியும். இதன்மூலம் பெரிய வனப்பகுதியை காப்பாற்றிவிடலாம். பொதுமக்களும் வனம் என்பது நமது சொந்த சொத்து என நினைத்து பாதுகாக்க வேண்டும். மனித குலத்திற்கு வனமும், வனவிலங்குகளும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும் என்றார்.
இத்தகைய காட்டுத்தீயை தடுக்க வனத்துறையும், அரசும் முயற்சி செய்தால் மட்டும் போதாது. மனிதன் உயிர்வாழவும் பல்லுயிர் இனப்பெருக்கம் நடைபெறவும் வனப்பகுதியை காப்பது நமது அனைவரின் கடமை.