மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்


மீண்டும்  பா.ஜ.க.வில் இணைந்தார் ஜெகதீஷ் ஷெட்டர்
x
தினத்தந்தி 25 Jan 2024 9:22 AM GMT (Updated: 25 Jan 2024 10:00 AM GMT)

ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இணைந்துள்ளதால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

கர்நாடகா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவுக்கு திரும்பியுள்ளார். அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்த ஜெகதீஷ் ஷெட்டர், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தன்னை மீண்டும் பாஜகவில் இணைத்தார்.

பாஜக மூத்த தலைவரும், ஆர்.எஸ்.எஸ்.வாதியுமான ஜெகதீஷ் ஷெட்டர் (68), கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது, சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அந்த தேர்தலில் ஹூப்ளி-தர்வாட்-மத்திய சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கினகையாலிடம் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பண பலத்தால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அப்போது ஷெட்டர் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து அவருக்கு எம்.எல்.சி பதவி அளிக்கப்பட்டது. இந்த பின்னணியில், அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்தது நமக்கு மகிழ்ச்சியான செய்தி. அவரை கட்சிக்கு வரவேற்கிறோம் என மத்திய மந்திரி பூபேந்திர யாதவ் கூறினார்.

கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தேர்தலின் போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியை ஜெகதீஷ் ஷெட்டர் எதிர்பார்த்ததாக தெரிகிறது. தேர்தல் தோல்வி காரணமாக, எம்.எல்.சி. பதவியை அவருக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி அளித்தது. இருப்பினும், அவர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்ததாகவும், ஆனால், காங்கிரஸ் தாமதித்து வந்த காரணத்தால் அதிருப்தியில் இருந்த அவர், மீண்டும் பாஜகவில் ஐக்கியமாகி விட்டதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அவர் பாஜகவில் இணைந்துள்ளதால், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story