கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
x

கோப்புப்படம்

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டது.

மண்டியா,

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின்பேரில் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதில் மண்டியாவில் உள்ள 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து வினாடிக்கு 3,575 கன அடி நீரும், மைசூருவில் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது.

அதன்பேரில் இவ்விரு அணைகளில் இருந்தும் நேற்று காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 6,075 கன அடி நீர் திறக்கப்பட்டு இருந்தது. கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,451 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது.

அதுபோல் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 1,180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 2,273.59 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6,337 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று அது வினாடிக்கு 6,075 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளாா்.

காவிரி விவகாரத்தில் சமரசம் கிடையாது என்றும், ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் நீர் திறப்பு தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.


Next Story