'டெல்லியில் ஜி-20 மாநாடு; மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு' - காங்கிரஸ் கட்சி விமர்சனம்


டெல்லியில் ஜி-20 மாநாடு; மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு - காங்கிரஸ் கட்சி விமர்சனம்
x
தினத்தந்தி 7 Sept 2023 6:50 AM IST (Updated: 7 Sept 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. 160-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். கலவரத்தை தொடர்ந்து, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களில் பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, கலவரம் வெடித்து 4 மாதங்களை கடந்த நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்புமாறு மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. சிலர் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களை ராணுவம் அனுமதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

ராணுவமோ, போலீசோ தடுத்தால் கூட வீடுகளுக்கு செல்வோம் என்று ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால், மணிப்பூரில் மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது. வீடுகளுக்கு திரும்பும் முடிவை கைவிடுமாறு மணிப்பூர் மாநில செய்தித்துறை மந்திரி சபம் ரஞ்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டோர்பங் பகுதியில் 700 பேர் தங்கள் வீடுகளில் குடியேறி உள்ளனர். பல இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, பதற்றம் காரணமாக, பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.

இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், கக்சிங், தவுபால் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 11 மாவட்டங்களில், பகல் நேரத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இதற்கிடையே, மணிப்பூர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"டெல்லியில் ஜி-20 மாநாடு நடக்க போகிறது. ஆனால், மணிப்பூரில் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்கு பிறகும் அங்கு வன்முறை நீடிக்கிறது. ஆனால், மோடியின் இரட்டை என்ஜின் அரசுக்கோ, அங்கு நிலைமை சீராக இருக்கிறது."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story