அசாமில் சில இடங்களில் ராகுல்காந்தி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு


அசாமில் சில இடங்களில் ராகுல்காந்தி யாத்திரை செல்ல அனுமதி மறுப்பு
x

அசாமின் மோரிகான் மாவட்டத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கவுகாத்தி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை தொடங்கினார். யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் இன்று ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்துவதாக இருந்தது. இந்த நிலையில் மோரிகான் மாவட்டத்தில் தெருமுனை கூட்டம் மற்றும் பாதயாத்திரை நடத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, மாவட்ட ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், "உளவுத்துறை தகவலின் அடிப்படையில், இன்று அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி யாத்திரை நடத்தினால் இதைப் பயன்படுத்தி சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கலாம்.

எனவே, ராகுல்காந்தியின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதியும், மோரிகான் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் பிஹுடோலி போலீஸ் பாயிண்டில் நடைபெறவுள்ள தெருமுனை கூட்டம் மற்றும் ஸ்ரீமந்த சங்கர்தேவா சவுக்கில் நடைபெறும் பாதயாத்திரையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வைஷ்ணவ துறவி ஸ்ரீமந்த சங்கரதேவாவின் பிறந்த இடத்திற்கு ராகுல்காந்தி செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story