காதலியின் முன்னாள் கணவரின் நண்பர் சுட்டு கொலை...!! டெல்லியில் அதிர்ச்சி
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் கைது செய்யப்பட்ட யாசீனிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி,
டெல்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் புலந்த் மசூதியருகே வசித்து வருபவர் முகமது யாசீன் (வயது 24). அவர், அந்த பகுதியை சேர்ந்த இஷ்ரத் (வயது 23) என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். மதுபான பார் ஒன்றில் இஷ்ரத் வேலை செய்து வருகிறார்.
ஆனால் இஷ்ரத்துக்கு, நியூ சீலாம்பூர் பகுதியை சேர்ந்த சொஹைல் கான் (வயது 22) என்பவருடன் திருமணம் நடந்து ஒன்றரை வயதில் ஒரு மகள் உள்ளது. எனினும், இஷ்ரத் மற்றும் கான் இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் விவாகரத்து செய்தனர்.
கானுக்கு, அதே பகுதியை சேர்ந்த முகமது முஸ்டாகீம் (வயது 22) என்ற நண்பர் இருந்துள்ளார். அவர் துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நள்ளிரவு 12.45 மணியளவில், இஷ்ரத் வீட்டுக்கு முஸ்டாகீமை அழைத்து கொண்டு கான் சென்றுள்ளார். ஆனால், யாசீன் கதவை திறந்து கானிடம் பேசியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், திடீரென யாசீன் கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டுள்ளார். 3 முறை சுட்டபோதும், குறிதவறி சென்றது. கான் தப்பி விட்டார். ஆனால், அவருக்கு பின்னால் இருந்த முஸ்டாகீமின் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சரிந்து விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அவரை தூக்கி கொண்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கான் சென்றார். ஆனால், அதில் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவம் பற்றி இஷ்ரத் மற்றும் யாசீன் இருவரும் போலீசாருக்கு தெரிவித்தனர்.
சம்பவ பகுதிக்கு போலீசார் சென்றபோது, யாசீன் தப்பி விட்டார். இதுபற்றி காவல் துறையின் துணை ஆணையாளர் ஜாய் திர்க்கி கூறும்போது, கான் அளித்த புகாரின்பேரில் யாசீனுக்கு எதிராக கொலை, கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வைத்து யாசீன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 3 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையின்போது யாசீன், இரவு நேரத்தில் கானும், இஷ்ரத்தும் சந்திப்பதில் தனக்கு விருப்பமில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர் என்றார்.
இஷ்ரத்தும், யாசீனும் அருகருகே வீடுகளில் வசித்து வந்துள்ளனர். ஓராண்டுக்கு முன்பே நண்பர்களாகவும் இருந்து வந்தனர். திருமணம் செய்து கொள்கிறேன் என யாசீன் உறுதி கூறியதும், கானை கடந்த ஆண்டு இஷ்ரத் விவாகரத்து செய்திருக்கிறார்.
இந்த விவாகரத்து நடைபெறுவதற்கு யாசீனே முழு பொறுப்பு என கான் கூறுகிறார். இதனாலேயே, அந்த இரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என்று டி.சி.பி. கூறியுள்ளார்.