விவசாயிகள் அமைதி காக்கவும்: 5-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு


விவசாயிகள் அமைதி காக்கவும்: 5-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
x

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரிகள் 18-ம் தேதி இரவு நடத்திய 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் பருப்பு வகைகள், சோளம், பருத்தி ஆகிய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்வதாக மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. விவசாயிகள் நலன் சாரா இந்த முன்மொழிவுகளை நிராகரிப்பதாக விவசாயிகள் 19-ம் தேதி தெரிவித்தனர்.

நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மத்திய வேளாண் துறை மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படியும், அமைதியை நிலைநாட்டவும் விவசாயிகளுக்கு மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும். போராட்டம் தீர்வு ஆகாது. விவசாயிகள் அமைதிகாக்க வேண்டும் என்றார்.

வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளித்தல், பயிர்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். பஞ்சாப்-அரியானா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், வேளாண் வாகனங்களுடன் அங்கு முகாமிட்டுள்ளனர்.


Next Story