குஜராத் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு


குஜராத் சட்டசபை தேர்தல்:  காங்கிரஸ் தலைவர் கார்கே வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிப்பு
x

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர், முதல்-மந்திரிகள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் ஆகியோர் நட்சத்திர பிரசாரகர்களாக உள்ளனர்.



காந்திநகர்,


குஜராத் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ந்தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ந்தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.

டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். குஜராத்தில், 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்க வைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. புதிதாக, கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ள சூழலில், இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி, காங்கிரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தில், மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை கடந்த 5 நாட்களுக்கு முன் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. வேட்பாளர்களின் ஓட்டு வேட்டையும் நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், சச்சின் பைலட், ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேர்தலுக்கான பிரசாரம் செய்யும் நட்சத்திர நபர்களாக உள்ளனர்.


Next Story