அரியானா அரசியலில் பரபரப்பு; இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது பா.ஜ.க.


அரியானா அரசியலில் பரபரப்பு; இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது பா.ஜ.க.
x

அரியானாவின் புதிய முதல்-மந்திரி நயப் சிங் சைனி, கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம், தனக்கு 48 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பதற்கான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.

சண்டிகார்,

அரியானாவில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. எனினும், கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக ஜனதா கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

ஜனநாயக ஜனதா கட்சியின் சார்பில் துணை முதல்-மந்திரியாக உள்ள துஷ்யந்த் சவுதாலாவுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தொகுதி பகிர்வில் உடன்பாடு ஏற்படாத சூழலில், இந்த மோதல் முற்றியது.

பா.ஜ.க.வுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி முறித்து கொள்ள உள்ளது என வெளியான தகவலை அடுத்து அரியானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை முன்னிட்டு, தருண் சக் மற்றும் அர்ஜுன் முண்டா உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அரியானாவுக்கு விரைந்தனர்.

இந்த சூழலில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் பதவி விலகினார். அவர் தன்னுடைய மந்திரி சபையை சேர்ந்த சகாக்களுடன் சென்று கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் அதற்கான கடிதம் ஒன்றை வழங்கினார். உடனடியாக அவரது மந்திரிகள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனால், அமைச்சரவை கலைக்கப்பட்டது.

இந்த சூழலில், அரியானாவின் புதிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த நயப் சிங் சைனி நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா, பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அரியானாவில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில், முதல்-மந்திரி சைனி, புதிய பா.ஜ.க. அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிப்பார். அவர், கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம், தனக்கு 48 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்பதற்கான கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டசபை கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்றும் அப்போது கவர்னரிடம் அவர் கேட்டு கொண்டார்.

இதன்படி, சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபையில் பா.ஜ.க.வுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த கூட்டணிக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 7-ல் 6 பேர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதேபோன்று, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்தியன் லோக் தளம் மற்றும் அரியானா லோகித் கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ. உள்ளனர். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கு ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவளிக்காதபோதும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியில் நீடிக்க முடியும். இதனால், சைனி பெரும்பான்மையை எளிதில் நிரூபிக்க கூடிய சூழல் காணப்படுகிறது.


Next Story