வடமாநிலங்களை புரட்டி போடும் கனமழை: 145க்கும் மேற்பட்டோர் பலி..!


வடமாநிலங்களை புரட்டி போடும் கனமழை: 145க்கும் மேற்பட்டோர் பலி..!
x

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி,

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இந்தியாவில் 145க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜூலை 19ம் தேதி வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதி (படம்: ANI NEWS)

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 91க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். மேலும் 14 பேரை காணவில்லை என தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். கனமழையால் ரூ.4000 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், யமுனை நதியின் நீர் மட்டம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததால், சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளது. குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். யமுனை நதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் தலைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழைய உஸ்மான்பூர் கிராமத்தில் வசிக்கும் மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்டனர் (படம் : PTI NEWS)

டெல்லியில் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மக்களை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களிலும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வானிலை சீரடைந்ததால் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்னன. இதுவரை கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 21 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த புகுதிகளில் இருந்து மக்களை மீட்பு படையினர் மீட்டனர் (படம்: PTI NEWS)

உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் கனமழையால் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மாநிலத்தில் அதிக மழை பெய்து வருவதை ஆய்வு செய்ய மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கங்கை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஹரித்வார் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளது.


Next Story