இமாசல பிரதேசம்: அதானி வில்மர் நிறுவனத்தில் கலால் துறை அதிரடி சோதனை


இமாசல பிரதேசம்: அதானி வில்மர் நிறுவனத்தில் கலால் துறை அதிரடி சோதனை
x
தினத்தந்தி 9 Feb 2023 9:57 AM GMT (Updated: 9 Feb 2023 10:41 AM GMT)

இமாசல பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. முறைகேடு பற்றி கலால் துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது.

சோலன்,


ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த வாரம் சரிவை சந்தித்தன. எனினும், சரிவில் இருந்து அந்நிறுவனம் மீட்சி பெற்று வருகிறது. அதானி விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது.

இதனால், அவை நடவடிக்கைகளில் அமளி ஏற்பட்டு அடிக்கடி ஒத்தி வைக்கப்படும் சூழல் காணப்படுவதுடன், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் உள்ள பர்வானூ என்ற பகுதியில் அதானி வில்மர் குரூப் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் மாநில கலால் மற்றும் வரி விதிப்பு துறை அதிகாரிகள் நேற்று மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி அந்த துறையின் இணை இயக்குனர் ஜி.டி. தாக்குர் சோதனையை உறுதி செய்து கூறும்போது, இமாசல பிரதேச தென்மண்டல அமலாக்க பிரிவின் சிறப்பு படையினர், அதானி வில்மர் நிறுவன வளாகங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

நிறுவன கிடங்குகளில் ஆய்வு செய்யப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன. இதில், ஜி.எஸ்.டி. வரியை சரி செய்து உள்ளனர். செலுத்த வேண்டிய வரி தொகையை அவர்கள் செலுத்தவில்லை.

அந்த நிறுவனம் 10 முதல் 15 சதவீத வரியை செலுத்துவது கட்டாயம். அதனை கட்டாமல் உள்ளது சந்தேகம் எழுப்பி உள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். அந்நிறுவனமும் சோதனையை உறுதி செய்து உள்ளது. எனினும், இது வழக்கம்போல் நடைபெற கூடிய சோதனை என தெரிவித்து உள்ளது.

சமீபத்திய இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்து உள்ளது. முதல்-மந்திரியாக சுக்வீந்தர் சிங் சுக்கு ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில், அதானி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.135 கோடி வருவாயை ஈட்டி வருகிறது. அதானி குழுமத்தின் 7 நிறுவனங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன.

அந்நிறுவனம் சார்பில் பழ வியாபாரம் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனினும், மாநிலத்தில் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏ.சி.சி. சிமெண்ட் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.


Next Story