இமாசல பிரதேசம்: 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை
இமாசல பிரதேசத்தில் கனமழையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பொழிவால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், சாலைகள் பல முற்றிலும் அழிந்து விட்டன. பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத்திற்கு தேவையான தண்ணீர் விநியோகம் ஆகியவை பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி வருவாய் துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறும்போது, ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 188 பேர் உயிரிழந்தனர். 194 பேர் காயமடைந்தனர். 652 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுதவிர, 6500 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர் சுரேந்தர் பால் கூறும்போது, சிம்லா, சோலன், சிர்மவுர், மண்டி, பிலாஸ்பூர், காங்ரா, சம்பா, ஹமீர்பூர் மற்றும் உனா ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும். கடந்த 100 ஆண்டு பதிவுகளை பார்க்கும்போது, நடப்பு ஆண்டில் அதிக மழைப்பொழிவு உள்ளது என கூறியுள்ளார்.