வாக்காளர் அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பெண்


வாக்காளர் அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பெண்
x
தினத்தந்தி 14 April 2023 6:45 PM GMT (Updated: 14 April 2023 6:45 PM GMT)

சிக்பள்ளாப்பூர் அருகே 19 மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் அருகே 19 மாதங்களாக பிரிந்து வாழும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வந்த கணவரை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

அரசு பஸ் கண்டக்டர்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், மனைவியை விட்டு பிரிந்து தலைமறைவாக இருந்து வந்த கணவர் தனது வாக்காளர் அடையாள அட்டைய எடுக்க மனைவி வீட்டுக்கு வந்த போது வசமாக சிக்கிக்கொண்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி தாலுகா எட்டிகடாபள்ளியை சேர்ந்தவர் கங்காராஜேஸ்வரி. இவரது கணவர் ஒய்.எஸ்.மகேஷ். இவர் கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் கடந்த 19 மாதங்களுக்கு முன்பு மனைவியுடன் தகராறு செய்துவிட்டு ஒய்.எஸ்.மகேஷ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். தனது மனைவி, பிள்ளைகளை கவனிக்காமல் அவர் தனியாக ஒரு வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

வாக்காளர் அடையாள அட்டை எடுக்க வந்தார்

இந்த நிலையில் கங்காராஜேஸ்வரி, மகேசை வீட்டுக்கு வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மகேஷ் திடீரென்று கங்காராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார். அவர் சட்டசபை தேர்தலையொட்டி வாக்களிக்க தனது வாக்காளர் அடையாள அட்டையை தேடி அங்கு வந்துள்ளார்.

அந்த அட்டையை எடுத்துக்கொண்டு அவர் வெளியே செல்ல முயன்றுள்ளார். ஆனால் கங்காராஜேஸ்வரி, தன்னையும், பிள்ளைகளையும் தவிக்கவிட்டு சென்ற கணவர் மீண்டும் தப்பி சென்றுவிடக் கூடாது என கருதி, கணவரை உள்ளே வைத்து பூட்டிவிட்டார்.

போலீஸ் விசாரணை

பின்னர் அவர் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் விரைந்து வந்து, அவரை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது மனைவி நடத்தை சரியில்லை. அவரால் எனது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அவருடன் வாழப்பிடிக்காமல் தனியாக வசித்து வருகிறேன். அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தி தனித்தனியாக அனுப்பிவைத்துள்ளனர்.


Next Story