ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கி சூட்டில் பலர் காயம்


ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிப்பு: துப்பாக்கி சூட்டில் பலர் காயம்
x

ஊரடங்குக்கு மத்தியிலும் மணிப்பூரில் கலவரம் நீடிக்கிறது. அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் காயம் அடைந்தனர்.

இம்பால்,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கலவரம் தொடர்கதையாய் நீளுகிறது.

அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் தீவிரமாக எதிர்க்கின்றன.

ராணுவம் குவிப்பு

இதனால் அங்கு இரு தரப்பிலும் நடந்து வருகிற மோதல்கள் பெருத்த உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த மாதம் 3-ந் தேதி முதல் நடந்து வருகிற வன்முறைகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் வீடுகள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டுள்ளன.

கலவரங்களால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சுமார் 350 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் பல்வேறு நகரங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இணையதளச்சேவை முடக்கப்பட்டுள்ளது.

9 பேர் கொல்லப்பட்டனர்

இந்த நிலையில் அங்கு மெய்தி இன மக்கள் அதிகமாக வசிக்கிற இம்பால் கிழக்கு மாவட்டமும், பழங்குடியினர் வசிக்கும் கங்க்போக்பி மாவட்டமும் சந்திக்கும் காமென்லோக் கிராமத்தை குகி இன போராளிகள் நேற்று முன்தினம் அதிகாலை ஆயுதங்களுடன் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். எதிர்தரப்பு வீடுகள் மீது குண்டுவீசி தாக்குதல் தொடுத்தனர். இதில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

வன்முறை, துப்பாக்கி சூடு

இம்பால் கிழக்கு பகுதியில் ஊரடங்கு தொடர்கிறது. அங்கு நேற்று அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது. அப்போது குகி போராளிகள் தாக்கி தங்கள் சமூகத்தினர் 9 பேர் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்தரப்பினர் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்திலும் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அதிரடிப்படையினர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இருப்பினும் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.


Next Story