மகனை சுசனா சேத் கொன்றது எப்படி? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்


மகனை சுசனா சேத் கொன்றது எப்படி? பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
x

சுசனா சேத் தனது மகனுக்கு அதிக அளவில் இருமல் டானிக் கொடுத்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பனாஜி,

கோவாவில் ஒரு ஓட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிறுவனர் சுசனா சேத் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் குழந்தையை தலையணை அல்லது துணியை வைத்து கொன்றுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரேத பரிசோதனை தொடர்பான விவரம்:-

சுசனா சேத் கணவருடன் உள்ள கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். ஆனால் கணவர் குழந்தையுடன் வாரம்தோறும் ஒருமுறை பேசுவது பிடிக்காத சுசனா சேத் கணவரை பழிவாங்குவதற்காக மகனை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். கடந்த சனிக்கிழமை கோவாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சுசனா சேத் மற்றும் அவரது மகன் சின்மய் வந்துள்ளனர். அங்கு தனக்கு சளி, இருமலாக இருப்பதாக ஓட்டல் ஊழியர் ஒருவரிடம் கூறி இருமல் டானிக் வாங்கி வர சொல்லி இருக்கிறார். இதையடுத்து ஓட்டல் ஊழியரும் மருந்து வாங்கி வந்திருக்கிறார். அந்த மருந்தை தனது மகனுக்கு அதிக அளவில் கொடுத்திருக்கிறார். டானிக் குடித்த குழந்தை மயங்கியுள்ளது அதன் பின் தலையணை அல்லது துணியை கொண்டு அவன் முகத்தில் அழுத்தியதில் குழந்தை மூச்சுதிணறி இறந்திருக்கலாம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம்:-

கர்நாடக மாநிலத்தின் ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை நிறுவனர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கடரமணா. இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சின்மய் என்ற பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது 4 வயது ஆகிறாது.

சுசனா சேத்துக்கும் அவருடைய கணவருக்கும் கருத்துவேருபாடு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் வெங்கடரமணாவுக்கு பிலிப்பைன்சில் வேலை கிடைத்ததால் அவர் அங்கு சென்றுவிட்டார். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறுவன் சின்மயிடம் வெங்கடரமணா பேச கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. அதன்பேரில் அவர் ஞாற்றுக்கிழமைகளில் தனது மகனுடன் செல்போன் வீடியோ அழைப்பில் பேசி வந்தார்.

சுசனா சேத் தனது மகனுடன் கடந்த சனிக்கிழமை வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். நேற்று காலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் டாக்சி மூலம் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த பராமரிப்பு ஊழியர் அங்கு ரத்தக்கறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை பற்றி ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சுசனா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன் செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டலில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின.

சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக டாக்சி வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான் எனவும், அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனவும் அறிவுறுத்திய நிலையில் சுசனா சேத், டாக்சியில்தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் சுசனா சேத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே என விசாரித்தனர். அப்போது சுசனா சேத் தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார். ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும் கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சுசனா சேத்தை கைது செய்தனர். பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் வெங்கடரமணாவுடன், தன்னுடைய மகன் வீடியோ அழைப்பில் பேசுவது சுசனாவுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. மேலும் அவர் வெங்கடரமணா மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவர், தனது கணவரை பழிவாங்க எண்ணி மகனை கொன்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் சுசனா சேத் தனது கையை அருத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story