ஐ.ஏ.எஸ். கனவு; கால்களால் தேர்வெழுதிய கைகளை இழந்த நபர்


ஐ.ஏ.எஸ். கனவு; கால்களால் தேர்வெழுதிய கைகளை இழந்த நபர்
x

பீகாரில் மின் விபத்தில் இரு கைகளை இழந்த நபர் மனம் தளராமல் கால்களால் தேர்வு எழுதியுள்ளார்.



பாட்னா,



பீகாரில் முங்கர் நகரில் வசித்து வரும் நந்தலால் குமார் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு மின்சாரம் தாக்கியதில் இரு கைகளை இழந்துள்ளார். அவர் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சிய கனவுடன் இருந்துள்ளார். ஆனால், கைகளை இழந்த பின்பு அவரால் தேர்வு எழுதுவது சவாலான ஒன்றானது.

அவரது தந்தை சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதனால், போதிய வருவாய் இன்றி நந்தலால் படிப்பை தொடர முடியாத நிலை இருந்தது. அவருக்கு சிகிச்சை பெற முடியாமலும் இருந்தது.

எனினும் மனம் தளராமல் அவர், தனது கால்களால் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் மெட்ரிக் வகுப்பு தேர்வு எழுதி முடித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு துணை மண்டல அதிகாரி சஞ்சீவ் என்பவர் நிதியுதவி அளித்து உள்ளார். 2019ம் ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்பின்னர் நடப்பு 2022ம் ஆண்டில் பொருளாதார பட்ட படிப்புக்கான தேர்வையும் கால்களால் எழுதியுள்ளார்.

இதனை முடித்த பின்பு பி.எட். படிக்க வேண்டும். அதன்பின்னர் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து தயாராக வேண்டும் என நந்தலால் கூறுகிறார். நந்தலால், தனது கைகளை மின்சார விபத்தில் இழந்தபோதும் நம்பிக்கையை விடாமல், கால்களால் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தனது லட்சிய கனவை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறார். அவரது மனதைரியத்திற்கு ஒவ்வொருவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.




Next Story