காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் - ராகுல் காந்தி


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் - ராகுல் காந்தி
x

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என்று ராகுல்காந்தி கூறினார்

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராகி வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி எம்.பி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்கப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிப்பதன் மூலம் நாட்டின் 15 கோடி விவசாயி குடும்பங்கள் பயன்பெறும்.

மேலும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும். நீதிக்கான காங்கிரஸ் பயணத்தில் இது முதல் உத்தரவாதம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story