இந்தியா, வங்காளதேசம் இடையே குழாய்வழி டீசல் வினியோகம்


இந்தியா, வங்காளதேசம் இடையே குழாய்வழி டீசல் வினியோகம்
x

இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு அதிவேக டீசலை குழாய்வழியாக எடுத்துச்செல்லும் திட்டத்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் சேர்ந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

132 கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைத்து இந்தியாவில் இருந்து வங்காளதேசத்துக்கு டீசல் எடுத்துச்செல்லும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குழாய்வழி டீசல் வினியோகம்

இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே நல்லுறவு நிலவுகிறது. இந்த நிலையில் 126.57 கி.மீ. தொலைவில் வங்காளதேசத்திலும், 5 கி.மீ. தொலைவில் இந்தியாவிலும் குழாய் அமைத்து, வங்காளதேசத்துக்கு அதிவேக டீசலை எடுத்துச்சென்று வினியோகிக்கும் திட்டத்தை நிறைவேற்ற இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. அதன்படி குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்த திட்டம் ரூ.377 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.இந்த திட்டத்தை பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் காணொலிக்காட்சி வழியாக நேற்று தொடங்கி வைத்தனர்.

10 லட்சம் டன் அதிவேக டீசல்

இந்த குழாய் வழி திட்டம் மூலமாக வங்காளதேசத்தின் 7 மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் டன் அதிவேக டீசல் எடுத்துச்செல்லப்பட்டு வினியோகிக்கப்படும்.

இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-

இந்த குழாய்வழி எரிபொருள் வினியோக திட்டம், இந்திய வங்காளதேச உறவுகளின் புதிய அத்தியாயம் ஆகும். இந்த திட்டத்துக்காக அடிக்கல்லை நாம் 2018 டிசம்பரில் நாட்டினோம். இன்றைக்கு அதை வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் இணைந்து தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது வங்காளதேசத்துக்கு வேகமான வளர்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகள் அதிகரிப்பதற்கு இந்த திட்டம் முதன்மையான எடுத்துக்காட்டாக அமையும்.

முக்கியத்துவம் பெறுகிறது

கொரோனா காலத்தில்கூட குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றன. இது பெட்ரோலிய விலையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், கார்பன் உமிழ்வையும் குறைக்கும். இது விவசாயத்துக்கும், தொழில்களுக்கும் நன்மை பயக்கும்.

உலகில் பல நாடுகள் தங்களது எரிசக்தி, உணவு ப்பொருட்கள் வினியோகத்தை பராமரிப்பதில் போராடும் வேளையில், இந்த திட்டத்தை தொடங்கி வைப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story