'பிரளய்' ஏவுகணை சோதனை வெற்றி: எல்லைகளில் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் - அதிகாரிகள் தகவல்


பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி: எல்லைகளில் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் - அதிகாரிகள் தகவல்
x

கோப்புப்படம்

‘பிரளய்’ ஏவுகணை 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலசோர்,

டி.ஆர்.டி.ஓ., எனப்படும், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம், நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்காக 'பிரளய்' என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது.

இந்த ஏவுகணை, தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஆகும். 'பிரித்வி' ஏவுகணையை முன்மாதிரியாக கொண்டு தயாரிக்கப்பட்ட திட எரிபொருள் ஏவுகணை. 350 கி.மீ. முதல் 500 கி.மீ. தூரம்வரை உள்ள இலக்கை தாக்கக்கூடியது. 500 கிலோ முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கவல்லது.

முன்னதாக 'பிரளய்' ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் பாலசோரில் கடலோரத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் தீவில் நடந்தது. இலக்கை துல்லியமாக தாக்கி, ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. ஏவுகணை சென்ற பாதையை சாதனங்கள் துல்லியமாக கண்காணித்தன. திட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் ஏவுகணை பூர்த்தி செய்தது.

சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் பாதுகாப்பு தேவையை கருத்தில்கொண்டு 'பிரளய்' ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா-சீனா இடையிலான அசல் எல்லைக்கோட்டு பகுதியிலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீனாவின் 'டாங் பெங் 12' ஏவுகணை, ரஷியாவின் 'இஸ்கன்டர்' ஏவுகணை ஆகியவற்றுக்கு 'பிரளய்' ஏவுகணை சமமானது என்றும் அவர் கூறினார்.


Next Story