உலக பணக்காரர்கள் இருக்கும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்களும் இருக்கிறார்கள் - ராகுல் காந்தி
உலக பணக்காரர்கள் இருக்கும் நாட்டில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்களும் இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை இந்தியா யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று மகபூப்நகர் மாவட்டத்தில் நடந்த தெருமுனை கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இன்று இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேலையில்லாதவர்கள் உள்ளனர். அதே வேளையில் உலக அளவில் அதிக பணக்காரர்களை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. அவர்கள் (பணக்காரர்கள்) என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
இங்கே முதல்-மந்திரி (சந்திரசேகர் ராவ்) மற்றும் அங்கு பிரதமர் (மோடி) ஆகியோர் பணக்காரர்களுக்கு முழு ஆதரவாக உள்ளனர். இவை அரசியல் கட்சிகள் அல்ல வணிகங்கள். நாட்டில் விவசாயிகள் முயற்சி செய்த போதிலும் உரிய வருமானத்தை பெற முடியவில்லை.
நாட்டில் வெறுப்பையும் வன்முறையையும் பா.ஜ.க பரப்புகிறது. யாரையும் வெறுக்காமல் எனது நடைபயணம் நதி போல் நடந்து வருகிறது. இதுதான் உண்மையான இந்தியா. இதுதான் நமது வரலாறு. பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்-ம் என்ன செய்தாலும் அது நாட்டுக்கு எதிரானது.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.