பா.ஜனதா அரசுக்கு இந்தியா விரைவில் பாடம் புகட்டும் - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு


பா.ஜனதா அரசுக்கு இந்தியா விரைவில் பாடம் புகட்டும் - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
x

கோப்புப்படம்

செங்கோல் வரலாறு தெரியாத பா.ஜனதா அரசுக்கு இந்தியா விரைவில் பாடம் புகட்டும் என்று கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் பரபரப்பாக பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று 2-வது நாளாக நடைபெற்ற மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

ஆதரிக்கிறேன்

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. சார்பாகவும், இந்தியா கூட்டணி சார்பாகவும் நான் ஆதரிக்கிறேன்.

இந்தியாவில் முதல் முறையாக நீதித்துறை தலையிட்டு ஒரு மாநிலத்தை காப்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது மத்திய அரசுக்கு வெட்கக்கேடு இல்லையா?.

மணிப்பூரில் இரட்டை என்ஜின் ஆட்சிநிர்வாகம் என்று பா.ஜனதா பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால் இருபக்கத்திலும் கூர்மையான ஆயுதங்களாக மணிப்பூரை தாக்கிக் கொண்டிருக்கிறது. இரட்டை பேரிடர்களும், இருபக்க தடைகளுமாக உள்ளன.

வெட்கமாக இல்லையா?

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிரதமர், அரிதான நிகழ்வாக நாடாளுமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்தார். ஆனால் அவைக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேச மறுக்கிறார்.

மணிப்பூரில் 170 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்ட்டோர் காயம் அடைந்துள்ளனர். 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 3,500 வீடுகள் அழிக்கப்பட்டு உள்ளன.

பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இரு பக்கத்திலும் இது நடந்துள்ளது. 3 மாதங்களாக நடந்து வரும் இந்த வன்முறையை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மணிப்பூர் முதல்-மந்திரியை கேட்டால், "2 பேரும் சகோதரர்கள், அரசு ஒரு தந்தையாக இருந்து இரு தரப்புக்கும் இடையே பேசிக்கொண்டு இருக்கிறது" என்று சொல்கிறார். இப்படி சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?.

மனசாட்சியை உலுக்கியது

போலீஸ்-பொதுமக்கள் விகிதாச்சாரம் இந்தியாவிலேயே மணிப்பூரில்தான் அதிகமாக உள்ளது. அசாம் ரைபிள் பிரிவு உள்பட 161 கம்பெனி மத்தியபடைகள் அங்கு இருந்தும் மக்களை காப்பாற்ற தவறிவிட்டது.

மணிப்பூர் போலீஸ், தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் இதில் அமைதியாகத்தான் இருந்தன. துரதிர்ஷ்டவசமாக அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. இல்லாவிட்டால் எல்லாவற்றையுமே மூடி மறைத்து இருப்பார்கள்.

தாய்மார்கள் தண்டிப்பர்

மகாபாரதத்தில் திரவுபதி துகிலுரியப்பட்டது பற்றி பா.ஜனதாவினர் பேசினார்கள். அந்த திரவுபதி போலத்தான் மணிப்பூர் பெண்களும் தங்களது ஆடை பறிக்கப்பட்டபோது கடவுளிடம் வேண்டினார்கள். ஆனால் அவர்களை காப்பாற்ற கடவுளும் வரவில்லை. அரசும் வரவில்லை.

குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமல்ல, அதை அமைதியாக பார்த்தவர்களுக்கும் தண்டனை உண்டு என்று மகாபாரதம் படித்தவர்களுக்கு தெரியும். அதைப்போல மணிப்பூர், ஹத்ராஸ், கத்துவா, உன்னாவ் சம்பவங்களின்போதும் அமைதியாக இருந்தவர்களை இந்த தேசத்தின் தாய்மார்கள் தண்டிப்பார்கள்.

மணிப்பூரில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு உணவு இல்லை. தண்ணீர் இல்லை. சுகாதார வசதி இல்லை. பசி, பட்டினியோடு குழந்தைகள் கதறுகிறார்கள்.

செங்கோல் வரலாறு

புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர்களின் பரம்பரையில் வந்தது என்று சொன்னீர்கள். உங்களுக்கு தமிழ்நாட்டின் வரலாறு சரியாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் சாமானியரின் கோபத்தால் தகர்ந்த பாண்டியர்களின் செங்கோல் வரலாறு உங்களுக்கு தெரியுமா?.

கண்ணகி கோபப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? எங்கள் மீது இந்தியை திணிப்பதை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள். அது பல பாடங்களை உங்களுக்கு கற்றுத்தரும்.

உங்களை தேசியவாதிகள் என்றும், எங்களை தேசத்துக்கு எதிரானவர்கள் என்றும் சொல்கிறீர்கள். தேசத்தின் அனைத்து மக்களையும் ஒன்றாக மதிக்கத் தெரியாத நீங்களா தேசியவாதிகள்?. இந்திய தாயை நீங்கள் புண்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். அது ஒவ்வொரு நாளும் ரத்தம் வடித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் தக்க பாடத்தை இந்தியா வெகு விரைவில் புகட்டும் என்று கனிமொழி பேசினார்.


Next Story