இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்


இந்தியாவின் ராஜதந்திரம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்
x

கோப்புப்படம்

கடந்த 30 நாட்களில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில், ஜி-20 பல்கலைக்கழக தொடர்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரிடையே பேசினார்.

அவர் பேசியதாவது:-

நாட்டின் வளர்ச்சி பயணம் தொடர்வதற்கு தூய்மையான, தெளிவான, வலிமையான அரசு அவசியம். கடந்த 30 நாட்களில், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள், புதிய உச்சத்தை தொட்டுள்ளன.

நிலாவில் இந்தியா

கடந்த 30 நாட்களில், 85 உலக தலைவர்களை சந்தித்துள்ளேன். இன்றைய சர்வதேச சூழ்நிலையில், எண்ணற்ற நாடுகளை ஒரே இடத்தில் ஒன்றுசேர்ப்பது சிறிய விஷயம் அல்ல. ஜி-20 மாநாட்டுக்காக அதை சாதித்தோம்.

கடந்த 30 நாட்களின் சாதனை பட்டியலை சொல்கிறேன். கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி, நிலவில் இந்தியா கால் பதித்தது. முதலில் வேண்டிக்கொண்டு இருந்தவர்களின் முகத்தில், திடீரென புன்னகை தோன்றியது. 'நிலாவில் இந்தியா' என்ற நமது குரலை உலகமே கேட்டது.

சர்வதேச விண்வெளி தினமாக கொண்டாடப்படுவதால், ஆகஸ்டு 23-ந்தேதி, அழியாத புகழை பெற்று விட்டது. இந்த பயணம் வெற்றி பெற்றவுடன், சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டம் தொடங்கி விட்டது.

1 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை

டெல்லியை மையப்படுத்திய நிகழ்ச்சியாக இருந்த ஜி-20 மாநாட்டை மக்கள்சார்ந்த தேசிய இயக்கமாக மாற்றினோம். இந்தியாவின் முயற்சியால் 'பிரிக்ஸ்' அமைப்பில் மேலும் 6 நாடுகள் சேர்க்கப்பட்டன.

ஜி-20 மாநாட்டில் டெல்லி பிரகடனத்துக்கு 100 சதவீத கருத்தொற்றுமையை ஏற்படுத்தியது, உலக தலைப்புச்செய்தி ஆனது. அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகள், 21-ம் நூற்றாண்டு செல்லும் திசையை மாற்றக்கூடிய வலிமை படைத்தவை.

கடந்த 30 நாட்களில், ஏழைகள், எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கைவினை தொழிலாளர்களுக்கு 'விஸ்வகர்மா' திட்டம் தொடங்கப்பட்டது.

ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story