'ராம பக்தர்களை அவமதிப்பதா?' ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்


ராம பக்தர்களை அவமதிப்பதா? ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கண்டனம்
x

பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையை தாக்குவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின்போது அமேதி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், "ஜனவரி 22-ந்தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஓ.பி.சி. அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. ஜனாதிபதி திரவுபதி முர்முவைக் கூட அனுமதிக்கவில்லை. பல செல்வந்தர்கள் நிகழ்ச்சியில் காணப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

மேலும், "வாரணாசிக்கு சென்றபோது இரவில் வாத்தியங்கள் முழங்குவதைப் பார்த்தேன். மாணவர்கள் போதையில் சாலையில் கிடந்ததைப் பார்த்தேன். உத்தர பிரதேசத்தின் எதிர்காலம் போதையில் நடனமாடிக் கொண்டு இருக்கிறது" என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது;-

"உத்தர பிரதேச இளைஞர்கள் போதையில் உள்ளனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தன் குடும்பத்தால் ஆளப்பட்ட பகுதியைப் பற்றி அவர் இப்படி பேசலாமா? அவரும், அவரது தாயாரும் இத்தனை வருடங்களாக எங்கிருந்து எம்.பி. ஆனார்கள்?

உத்தர பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளார். வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. ராகுல் காந்தியை நினைத்து இந்த நாடு வெட்கப்படுகிறது. அவர் தனது பேச்சை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராமர் கோவிலில் அதானியும், அம்பானியும்தான் அமர்ந்திருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார். கடவுள் ராமரையும், ராம பக்தர்களையும் அவமதிப்பதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பான்மையான இந்திய மக்களின் நம்பிக்கையை தாக்குவதையும், இளைஞர்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை பேசுவதையும் அவர் நிறுத்த வேண்டும்."

இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


Next Story