திருமணம் செய்வதாக கூறி பெண் பலாத்காரம்: காஷ்மீரில் பதுங்கிய ஐ.டி. ஊழியர் கைது


திருமணம் செய்வதாக கூறி பெண் பலாத்காரம்: காஷ்மீரில் பதுங்கிய ஐ.டி. ஊழியர் கைது
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

திருமணம் ெசய்வதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் காஷ்மீரில் பதுங்கிய ஐ.டி. ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

காஷ்மீரை சேர்ந்தவர் முசிப் அஷ்ரப் (வயது 32). இவர் பெங்களூரு ஹெப்பகோடி பகுதியில் தங்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2018-ம் ஆண்டு 38 வயதான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் ஒரே குடியிருப்பில் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, முசிப் அஷ்ரப், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் முசிப் அஷ்ரப்புக்கு ேவறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதனை அறிந்த 38 வயதான பெண், இதுகுறித்து கேட்டு முசிப் அஷ்ரப்புடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். ஆனால் அதற்கு முசிப் அஷ்ரப் மறுத்துள்ளார். மேலும் அந்த பெண்ணை மதம் மாற வேண்டும் என்று முசிப் அஷ்ரப் வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அந்த பெண், ஹெப்பகோடி போலீசில் புகார் அளித்தார்.

இதனை அறிந்த முசிப் அஷ்ரப் தலைமறைவானார். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் முசிப் அஷ்ரப், காஷ்மீரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காஷ்மீருக்கு விரைந்து சென்று அங்கு வீட்டில் பதுங்கி இருந்த முசிப் அஷ்ரப்பை கைது செய்தனர். அப்போது முசிப் அஷ்ரப்புக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு கைது செய்யுமாறும் அவரது பெற்றோர் போலீசிடம் கூறினர். மேலும் இதுதொடர்பாக காஷ்மீர் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு, முசிப் அஷ்ரப்பை கைது செய்து பெங்களூரு அழைத்து செல்ல அனுமதி வழங்கியது.

பின்னர் அவரை போலீசார் பெங்களூருவுக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர். இதையடுத்து முசிப் அஷ்ரப்பை போலீசார் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பெண்ணை செல்போனில் மிரட்டியதாக முசிப் அஷ்ரப்பின் சகோதரர் மோரிப் அஷ்ரப் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story