ஜெகதீஷ் ஷெட்டரை கட்டியணைத்து கண்ணீர்விட்ட மனைவி ஷில்பா

உப்பள்ளி திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டரை கட்டியணைத்து மனைவி ஷில்பா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
உப்பள்ளி:
உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் களமிறங்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு கட்சி மேலிடம் டிக்கெட் கொடுக்க மறுத்தது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுடன், அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் அவர் பெங்களூருவுக்கு வந்து காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சியில் இணைவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு அவர் காங்கிரசில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இணைந்தார்.
பின்னர் ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று மாலை சொந்த ஊரான உப்பள்ளிக்கு திரும்பினார். மதுரா எஸ்டேட் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வந்த அவருக்கு ஆதரவாளர்கள், தொண்டர்கள் திரளாக திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ஜெகதீஷ் ஷெட்டரை வீட்டுக்கு வாசலுக்கு வந்த வரவேற்ற அவரது மனைவி ஷில்பா உணர்ச்சி பெருக்கில் அவரை கட்டியணைத்து கண்ணீர்விட்டார். இதனால் ஜெகதீஷ் ஷெட்டரும் கண்ணீர்விட்டு அவரை ஆரத்தழுவினார். பின்னர் மனைவியை அவர் சமாதானப்படுத்தினார்.






