சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்; சித்தராமையா ஆரூடம்


சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும்; சித்தராமையா ஆரூடம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

மண்டியா:

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

மக்களின் மனநிலை

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.

காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.

நம்ப வேண்டாம்

பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.

இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

சர்க்கரை ஆலை

ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story