ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டம்


ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன் தலைமையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டம்
x

ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற நிலமோசடி தொடர்பான வழக்கில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 20-ந்தேதி ஜார்க்கண்ட்டில் உள்ள ஹேமந்த் சோரனின் இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதிக்குள் ஏதேனும் ஒருநாள் ஹேமந்த் சோரன் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. இக்கடிதத்துக்கு ஹேமந்த் சோரன் தரப்பில் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரபூர்வ இல்லத்தில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். ஆனால் வீட்டில் ஹேமந்த் சோரன் இல்லை என்றும் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை எனவும் தகவல் வெளியானது. மேலும் இந்த சோதனையின்போது அவரின் வீட்டில் இருந்து 36 லட்சம் பணம், அவரின் 2 பி.எம்.டபிள்யூ. காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்

இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமறைவாக இருப்பதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவார் என முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்தார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இன்று ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக முதல்-மந்திரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியின் மனைவி கல்பனா சோரனும் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் கூட்டணியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில தலைநகரை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கூட்டத்தில் பங்கேற்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story