திருமணம்-கோவில் விழாக்களில் மது விருந்துக்கு அனுமதி


திருமணம்-கோவில் விழாக்களில் மது விருந்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகு மாவட்டத்தில் திருமணம், கோவில் விழாக்களில் மது விருந்துக்கு அனுமதி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடகு:

கர்நாடகம்- கேரள மாநிலம் எல்லையில் மேற்குதொடர்ச்சி மலையில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. பிரதான தொழில் ஆக தேயிலை, காபி, குருமிளகு, பாக்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் கொடவா, கவுடா சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் திருமண விழா மற்றும் கோவில் விழாக்களில் மது விருந்து நடத்துவதை கலாசாரமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி குடகு மாவட்டத்தில் திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் மது விருந்து நடந்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கொடவா சமாஜ், கவுடா சமாஜ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், திருமணம், கோவில் விழாக்களில் மது விருந்து நடத்துவது ஆண்டாண்டு காலமாக நடைபெறும் நடைமுறை. இதை தடை செய்வது நியாயம் இல்லை. எனவே அனுமதி வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பா.ஜனதாவை சேர்ந்த கிலன் கணபதி என்பவர், இதுபற்றி தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், திருமணம் மற்றும் கோவில் விழாக்களில் மது விருந்து நடத்த விதித்த தடைைய நீக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே வேளையில் அரசியல் கட்சி தொடர்பான கூட்டங்கள், தேர்தல் பிரசார கூட்டங்களில் எக்காரணம் கொண்டும் மது விருந்து நடத்தக் கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மது விருந்து விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், கொடவா, கவுடா சமாஜ் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


Next Story