நாளை நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்


நாளை நடைபெறும் கூட்டத்தில் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் - எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம்
x

கோப்புப்படம்

பாட்னாவில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பொது ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் ஆகிய துறைகளில் மட்டுமே துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் உண்டு எனவும், மீதமுள்ள துறைகள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றலாம் எனவும், சிவில் சர்வீசஸ் துறைகளை நிர்வகிக்கலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் துணைநிலை கவர்னருக்கே கூடுதல் அதிகாரம் அளிக்கும் முந்தைய நிலையே தொடரும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதற்கு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அத்துடன் இந்த அவசர சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் திரட்டி வருகிறார்.

இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை அவர் சந்தித்து பேசினார்.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை (வெள்ளிக்கிழமை) பாட்னாவில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றன.

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நடத்தும் இந்த கூட்டத்தில், டெல்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மாநில சுயாட்சி

இந்த அவசர சட்டம் பெரும்பாலும் 'அரை மாநிலம்' என்று கருதப்படும் டெல்லியில் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பதால், மற்ற மாநிலங்களில் இதை அறிவிக்க முடியாது என்று அர்த்தமல்ல. இத்தகைய அரசாணைகளை வெளியிடுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள அனைத்து விஷயங்களையும் மத்திய அரசு கலைத்துவிடும்.

ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள எந்த ஒரு விஷயத்திலும் இதுபோன்ற அரசாணைகளை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே, மாநிலங்களின் சுயாட்சியைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடி, இந்த பிரச்சினையில் விவாதிப்பது மிகவும் அவசியம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story