கேரளா: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்


கேரளா: பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா நிறைவேற்றம்
x

கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா சட்டசபையில் எதிர் கட்சியினரின் அமளிக்கு இடையே நிறைவேறியது.

திருவனந்தபுரம்,

கேரள அரசுக்கும் கவர்னர் ஆரிப் முகம்மதுகானுக்கும் இடையே பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சமீபகாலமாக கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் நியமனங்களில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், தகுதி இல்லாதவர்களை நியமிக்க முயற்சி நடப்பதாகவும் கவர்னர் ஆரிப் முகம்மதுகான் குற்றம்சாட்டி வருகிறார்.

ஆனால் அதில் எந்த உண்மையையும் இல்லை என்றும், தகுதியானவர்களை மட்டுமே பல்கலைக் கழகங்களில் நியமிப்பதாகவும் கேரள அரசு கூறிவருகிறது.

சமீபத்தில் கேரளாவில் உள்ள 11 பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி, அவர்களை பதவி விலக கவர்னர் உத்தரவிட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னர் ஆரிப் முகம்மதுகானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இடதுசாரி கூட்டணி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முகம்மதுகானை நீக்க கடந்த மாதம் கேரள மந்திரிசபை கூட்டத்தில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை சட்டசபையில் கொண்டுவர கேரள அரசு முடிவெடுத்தது.

அதன்படி நேற்று காலையில் இந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்குவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் சம்மதம் தெரிவித்தனர். ஆனாலும், அந்த பதவிக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும். அதுவும் 14 பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே வேந்தரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தனர். இதை நிராகரித்த ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் இந்த மசோதா நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கோர்ட்டை நாட முடிவு

அதைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்த மசோதா மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஆனால் வேந்தர் பதவியிலிருந்து தன்னை நீக்கும் மசோதாவில் கையெழுத்து போடப்போவதில்லை என்று ஏற்கனவே கவர்னர் தெரிவித்திருந்தார். மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாவிட்டால் கோர்ட்டை நாடவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story