கேரளாவில் போலீசார் துப்பாக்கி சூடு: மாவோயிஸ்டுகள் தப்பியோட்டம்; இரவிலும் தொடரும் தேடுதல் வேட்டை


கேரளாவில் போலீசார் துப்பாக்கி சூடு:  மாவோயிஸ்டுகள் தப்பியோட்டம்; இரவிலும் தொடரும் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 14 Nov 2023 1:31 AM IST (Updated: 14 Nov 2023 1:34 AM IST)
t-max-icont-min-icon

வயநாட்டில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடந்த வாரம் துப்பாக்கி சூடு நடந்தது.

கண்ணூர்,

கேரளாவின் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உருப்பும்குட்டி வன பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, கேரள போலீசின் சிறப்பு படையினர் சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், ஜெட்டிதோடி பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

எனினும், சம்பவ பகுதியில் இருந்து மாவோயிஸ்டுகள் 8 பேர் தப்பியோடினர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில், 2 முகாம்கள் இருப்பது தெரிய வந்ததும், அவற்றை சோதனையிட்டனர். முகாம்களில் ரத்த கறைகள் இருந்துள்ளன. இதனால், அவர்கள் துப்பாக்கி சூடு மோதலில் காயமடைந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இரவிலும், மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி கரிகோட்டகாரி காவல் நிலைய போலீசார், உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த பகுதியில் உயரதிகாரிகள் தங்கி, ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வாரம் வயநாட்டில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சூழலில், மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.


Next Story