ஜம்மு பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: மத்திய அரசு


ஜம்மு பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: மத்திய அரசு
x

ஜம்மு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜம்முவின் கத்துவா மாவட்டம் மச்சேதி பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது அதை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், அந்த பகுதிகயில் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் ராணுவம் உறுதியாக உள்ளது என்றார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் பட்நோடாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நமது தீரமிக்க 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கடினமான நேரத்தில் நாடு அவர்களுடன் துணைநிற்கும். தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளது. அந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ராணுவம் உறுதியாக உள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் வேண்டுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அரமானேவும் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவத்துள்ளார். அவர் கூறுகையில், "துணிச்சலான 5 வீரர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. அந்த தியாகிகளின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். அவர்களை கொன்றவர்கள் பழிவாங்கப்படுவார்கள். இந்த தாக்குதலுக்கு பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா அழிக்கும்." என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு செயலாளரின் இந்த செய்தியை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story