கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது


கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது.

மண்டியா:

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 77 அடியாக சரிந்தது.

பருவமழை பொய்த்தது

கர்நாடகத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. அத்துடன் கோடையிலும் மழை பெய்யவில்லை. இதனால் அணைகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன.

அதுபோல் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. குறிப்பாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் உள்ள 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.எஸ்.ஆர் (கிருஷ்ணராஜசாகர்) அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. அதாவது நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு, குடகு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போய்விட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை.

77 அடியாக குறைந்தது

இதனால் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 80 அடியாக குறைந்தது. தொடர்ந்து குடிநீர் தேவை மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி கே.எஸ்.ஆர் அணையின் நீர்மட்டம் 77.79 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 713 கன அடி நீர் கொண்டிருக்கிறது. இதில் அணையில் இருந்து வினாடிக்கு 213 அடி நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாத பட்சத்தில், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் அணையின் நீரை நம்பியுள்ள சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, பெங்களூரு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

அதுபோல் பாசனத்திற்கு நீர் திறப்பது கேள்விக்குறியாகி வருகிறது. இதனால் மண்டியா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.


Next Story