பா.ஜனதா பிரமுகர் படுகொலை; இறுதி ஊர்வலத்தில் வன்முறை


பா.ஜனதா பிரமுகர் படுகொலை; இறுதி ஊர்வலத்தில் வன்முறை
x

சுள்ளியா அருகே படுகொலை செய்யப்பட்ட பா.ஜனதா பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். தொடர் பதற்றம் நீடிப்பதால் 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு:

சுள்ளியா அருகே படுகொலை செய்யப்பட்ட பா.ஜனதா பிரமுகரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். தொடர் பதற்றம் நீடிப்பதால் 4 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பா.ஜனதா நிர்வாகி

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே உள்ள நெட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் நெட்டார்(வயது 32). இவர் மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். மேலும் இவர் அப்பகுதியில் சொந்தமாக கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். தினமும் இவர் காலையில் இறைச்சி கடைக்கு வந்து, மாலையில் வீடு திரும்பிவிடுவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் இவர் வழக்கம்போல் இறைச்சி கடைக்கு வந்தார்.

இரவு வரை கடையிலேயே இருந்த அவர், இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்தனர்.

படுகொலை

பின்னர் அவர்கள் தங்களிடம் இருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரவீனை சரமாரியாக வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத பிரவீன், சுதாரித்துக் கொண்டு அந்த மர்ம நபர்களை திருப்பி தாக்கினார். மேலும் அவர்களின் பிடியில் இருந்து தப்பி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவரை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து விரட்டி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன் கால் தவறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பரபரப்பு

இந்த பரபரப்பு சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பெல்லாரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட புறநகர் போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவானே மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் சோனவானே கூறுகையில், 'பிரவீனை கொன்ற மர்ம நபர்கள் கேரளாவில் இருந்து வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த கோணத்தில் விசாரித்து வருகிறோம்' என்று கூறினார்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

முழு அடைப்பு

இதனால் கொதிப்படைந்த பா.ஜனதாவினர் மற்றும் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கடபா, சுள்ளியா, புத்தூர் ஆகிய தாலுகாக்களில் நேற்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்தனர். அதன்படி அந்த தாலுகாக்களில் நேற்று முழு அடைப்பு நடந்தது.

மேலும் பிரவீன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று சுள்ளியாவில் பா.ஜனதாவினர், விசுவ இந்து பரிஷத் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுள்ளியா, கடபா, புத்தூர் தாலுகாக்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'வேண்டும், வேண்டும் நியாயம் வேண்டும்' என்று கோஷமிட்டபடி சுள்ளியா, புத்தூர், கடபா டவுன் பகுதிகளில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மேலும் புத்தூரில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ்சின் கண்ணாடிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி உடைத்தனர்.

இதற்கிடையே படுகொலை செய்யப்பட்ட பா.ஜனதா பிரமுகர் பிரவீனின் உடல் புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

பிரேத பரிசோதனை

நேற்று காலையில் புத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரவீனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து அவரது உடல், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பிரவீனின் உடலை எடுத்துச் செல்ல முயன்றனர். இதற்கிடையே பிரவீன் படுகொலை செய்யப்பட்டது குறித்து அறிந்த பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் எம்.பி. மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றும் முன்பு பிரவீனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே புத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு இந்து அமைப்பினர் திரண்டனர். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும், அவர் இந்த படுகொலை சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர். அப்போது அவர்களை உயர் போலீஸ் அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆக்ரோஷமாக கோஷம்

இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் பிரவீனின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ஆம்புலன்ஸ் மெதுவாக வந்தது. மேலும் கூட்டத்தினர் பூக்களை ஆம்புலன்ஸ் மீது வீசி எறிந்த வண்ணம் இருந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் மக்களும், இந்து அமைப்பினரும் நின்று பிரவீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூக்களை வீசினர். இதற்கிடையே ஆம்புலன்ஸ் பெல்லாரே டவுனை வந்தடைந்தது.

அங்கிருந்து நெட்டார் கிராமத்திற்கு செல்ல இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஆம்புலன்சை நகர விடாமல் இந்து அமைப்பினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் பிரவீனின் சாவுக்கு நியாயம் வேண்டும் என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டனர்.

வன்முறை வெடித்தது

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சூழ்நிலையும் மோசமடைந்தது. இதையடுத்து போலீசார் கூட்டத்தினரை நோக்கி ஆம்புலன்சுக்கு வழிவிடும்படி எச்சரித்தனர். ஆனால் யாரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் கோஷமிட்டபடி இருந்தனர். மேலும் அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். போலீசார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தடியடி நடத்தினர்.

அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கானோர் மீது இந்த தடியடி நடத்தப்பட்டது. இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசார் நடத்திய தடியடியில் இந்து அமைப்பினர் சிலர் காயம் அடைந்தனர். தொடர்ந்து தடியடி நடத்தி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உடல் தகனம்

அதையடுத்து ஆம்புலன்சு அங்கிருந்து நெட்டார் கிராமத்திற்கு சென்றது. அங்கு பிரவீனின் உடலுக்கு குடும்பத்தினரும், பா.ஜனதாவினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் நெட்டார் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து பரபரப்பும், பதற்றமும் நிலவுவதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர தட்சிண கன்னடா மாவட்டம் மற்றும் உடுப்பி மாவட்டங்களிலும் சிறப்பு படையினர், அதிரடி படையினர், கமாண்டோ படையினர் என ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story