ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 மக்களவை தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஸ்ரீநகர்,
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
நாடாளுமன்ற தேர்தலின்போதே அருணாச்சலபிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்குள்ள சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே நாடாளுமன்ற தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜம்மு-காஷ்மீரில் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
காஷ்மீரில் இருந்து தனியான பிரிக்கப்பட்ட மற்றொரு யூனியன் பிரதேசமான லடாக் நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.