பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியம்- மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி
பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யின் ஆபாச வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளி-தார்வார் தொகுதியில் பா.ஜனதா சார்பில் களம் இறங்கியுள்ளார். அவர் அந்த தொகுதியில் வாக்களித்த பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் பெண்களை அதிகம் மதிக்கிறோம். பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். இதில் நாங்கள் தவறு செய்தவருக்கு கருணை காட்ட மாட்டோம். பெண்களுக்கு நடந்துள்ள அநீதி குறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும். தேவராஜ் கவுடா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மீது சில குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுகுறித்தும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.
இந்த வழக்கில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்கட்ட தேர்தல் முடிவடையும் வரை காத்திருக்காமல் முன்பே வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இந்த அரசு பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்கு பதிலாக அவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டுள்ளது. சில வீடியோக்கள் பழையது என்று சொல்கிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மூலம் தான் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. ஆனார். அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மந்திரி ஆனார். அப்போது இந்த வீடியோ குறித்து காங்கிரசுக்கு தெரியாதா? இவ்வாறு அவர் கூறினார்.