சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் - திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்


சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் - திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2024 4:43 AM IST (Updated: 20 March 2024 11:12 AM IST)
t-max-icont-min-icon

இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளதாக டெரிக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்காள போலீஸ் டி.ஜி.பி. மாற்றம் தொடர்பாக, பா.ஜனதாவையும், தேர்தல் ஆணையத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரிகளை மாற்றுவது போன்ற செயல்கள், தேர்தல் ஆணையத்தை கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளதாகவே தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளை பா.ஜனதா தனது கைப்பாவைபோல் வைத்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது மக்களை எதிர்கொள்ள பா.ஜனதா அச்சப்படுவதாகவே தோன்றுகிறது.

எனவே சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று அதில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தேர்தல் ஆணையத்துக்கு டெரிக் ஓ பிரையன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில், "தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, மார்ச் 15-ந்தேதி பிரதமர் மோடி, பா.ஜனதா அரசின் திட்டங்கள் குறித்து வாக்காளர்களுக்கு எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அரசு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசி தொகுதி வேட்பாளராக இருக்கும் பிரதமர் மோடியின் இந்த செயல் முற்றிலும் தேர்தல் விதிமீறலாகும்.

இதுபோன்ற பிரசாரங்களை தடுக்கவும், அந்த கடிதத்தை திரும்பப்பெறவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரதமரின் கடிதத்தை வாக்காளர்களுக்கு அனுப்புவதற்கான செலவையும் பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் செலவாக சேர்க்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு, பா.ஜனதா எம்.பி.யும், அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சாமிக் பட்டாச்சார்யா பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மூலம் பிரதமரின் பிம்பத்தை உடைக்க முடியாது. பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கு மக்களே சாட்சி. தேர்தல் முடிவில் அது தெளிவாக தெரியும். அதேபோல் பிரதமர் அலுவலகம் எந்த நடத்தை விதிகளையும் மீறவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குதான் மக்களை சந்திக்க பயம் ஏற்பட்டுள்ளது' என்று சாமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார்.


Next Story