இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்... வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. அடுத்து நடந்த பரபரப்பு
வாலிபரும், இளம்பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகி காதலித்தது தெரியவந்தது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இளம்பெண் வசிக்கிறார். அவர் கல்லூரி ஒன்றில் பி.காம் 2-வது ஆண்டு படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி வீட்டை விட்டு ஓடிப்போன மாணவி, அதன்பிறகு திரும்பி வரவில்லை. இதுபற்றி மடிவாளா போலீஸ் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்திருந்தார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தார்கள். அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, காணாமல் போன தனது மகளை மீட்டு கொடுக்கும்படி கோரி தாய், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்பேரில், அந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இதற்கிடையில், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மாணவிக்கும், கேரளாவை சேர்ந்த வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமாகி காதலித்தது தெரியவந்தது.
அந்த வாலிபர் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்ததால், வாலிபர் துபாயில் இருந்து கேரளாவுக்கு திரும்பியதும், கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி மாணவி வீட்டை விட்டு ஓடி சென்றார். பின்னர் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வசித்து வந்தது தெரியவந்தது. அத்துடன் அந்த மாணவியும், வாலிபரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதையடுத்து, அந்த மாணவியை கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு போலீசார் மீட்டு வந்து ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். இருதரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவியை தனியாக விசாரணை நடத்தினார்.
அப்போது அந்த மாணவி காதல் கணவருடன் செல்ல இருப்பதாகவும், தனக்கு 18 வயது நிரம்பி விட்டதாகவும் கூறினார். மேலும் தாயுடன் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். இதையடுத்து நீதிபதி அந்த மாணவியை, கணவருடன் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் வழக்கும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மாணவியின் தாய் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.