மகதாயி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்


மகதாயி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x

மகதாயி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளதற்கு கர்நாடக அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

மகதாயி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளதற்கு கர்நாடக அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

மகதாயி நதிநீர் பிரச்சினை

கர்நாடகம், மராட்டியம், கோவா உள்ளிட்ட மாநிலங்கள் இடையே மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. மகாதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறப்பட்டு இருந்தது. அதில், கர்நாடகத்திற்கு மகதாயி நதிநீரில் 13.46 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது ஒரு கோடி கனஅடி) தண்ணீரை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. கர்நாடகத்திற்கு வழங்கப்பட்டுள்ள தண்ணீரில் 5.4 டி.எம்.சி. தண்ணீரை உப்பள்ளி-தார்வார் மற்றும் பெலகாவி மாவட்டத்தின் குடிநீருக்காகவும், கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்தவும் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றிருந்தது.

மேலாண்மை ஆணையத்திற்கு ஒப்புதல்

இந்த கூட்டத்தில் மகதாயி மேலாண்மை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருந்தது. இதுகுறித்து மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் பதிவில், மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் போன்று, மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையமும் செயல்படும், என்று கூறி இருந்தார்.

அதாவது மகதாயி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி மகதாயி நதிநீர் பங்கீடு குறித்தும், அந்தந்த மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் குறித்தும் மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்கும். கர்நாடகத்தில் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடிக்கு நன்றி

இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக அரசின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. மகதாயி நதிநீர் விவகாரத்தில் பல ஆண்டுகள் கனவு நிறைவேற உள்ளது. மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்திருப்பதை கர்நாடக அரசு வரவேற்கிறது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கர்நாடகத்தில் செயல்படுத்த உள்ள நீர்ப்பாசன திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்படும், என்றார்.

இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் கூறும் போது, வடகர்நாடக மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக மகதாயி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. கலசா-பண்டூரி உள்ளிட்ட குடிநீர் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்றார்.


Next Story