மராட்டிய பேருந்து விபத்து: 24 பேரின் உடல்கள் கூட்டு தகனம்... ஒருவரது உடல் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
மராட்டிய பேருந்து விபத்தில் பலியானவர்களில் 24 பேர் உடல்கள் கூட்டு தகனம் செய்யப்பட்டது. ஒருவரின் உடல் மட்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
நாக்பூர்,
மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தில் நேற்று(சனிக்கிழமை) அதிகாலை 2 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் 11 ஆண்கள், 14 பெண்கள் என 25 பேர் பலியாகினர். இதில் 10 பேர் வார்தாவையும், 7 பேர் புனேவையும், 4 பேர் நாக்பூரையும், 2 பேர் யவத்மாலையும், 2 பேர் வாசிமையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேயும், ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் உடலை வாங்க அவர்களின் குடும்பத்தினர் புல்தானாவில் கூடியுள்ளனர். உடல்கள் கருகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் டி.என்.ஏ. பரிசோதனை செய்து உடல்கள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
டி.என்.ஏ. பரிசோதனைமூலம் அடையாளம் காண சில நாட்கள் செலவாகும். இதனால் மாவட்ட நிர்வாகம், பலியானவர்களின் உடல்களை கூட்டு தகனம் செய்ய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின்னர் பேசிய புல்தானா கலெக்டர் எச்.பி. தும்மோட், " 24 பேரின் உடல்கள் இன்று கூட்டு தகனம் செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இறந்தவர்களில் ஒருவரின் உடல் மட்டும் அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்"
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் 24 பேரின் உடல்களும் புல்தானாவில் உள்ள வைகுண்ட தாம் இந்து ஸ்மாஷன் சுடுகாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. அங்கு இறந்தவர்களின் உடல்கள் கூட்டு தகனம் செய்யப்பட்டது. மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தினர் இதில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.