கர்நாடகத்தின் பெலகாவி மற்றும் 865 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்


கர்நாடகத்தின் பெலகாவி மற்றும் 865 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும்; மராட்டிய சட்டசபையில் தீர்மானம்
x

கர்நாடகத்தில் மராத்தியர்கள் அதிகம் வசிக்கும் பெலகாவி, கார்வார் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் 865 கிராமங்களை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டிய சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மராட்டியம் - கர்நாடகம் இடையே மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 1957-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.

மீண்டும் மோதல்

மராத்தி மொழி பேசுவோர் அதிகம் வசிக்கும் பகுதிகளை மராட்டியத்துடன் இணைக்க வலியுறுத்தி அந்த மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் இருமாநில எல்லைப் பிரச்சினை சமீப நாட்களாக பூதாகரமாக வெடித்தது.

கர்நாடகத்தில், மராட்டிய வாகனங்கள் தாக்கப்பட்டன. மராட்டியத்தில் கர்நாடக அரசு பஸ்களில் கருப்பு மை பூசப்பட்டன.

கர்நாடகம் தீர்மானம்

இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து இரு மாநில முதல்-மந்திரிகளையும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் அழைத்து பேசினார்.

இதற்கு மத்தியில் எல்லைப்பிரச்சினையில் மராட்டியத்தை கண்டித்து கடந்த வியாழக்கிழமை கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், மராட்டியம் வேண்டுமென்றே எல்லைப் பிரச்சினையை கிளப்புவதாகவும், ஒரு அங்குல நிலத்தை கூட அந்த மாநிலத்துக்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

மராட்டிய சட்டசபையில்...

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாக்பூரில் நடைபெற்று வரும் மராட்டிய சட்டசபை கூட்டத்தில் நேற்று எல்லைப் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தீர்மானத்தை தாக்கல் செய்து பேசியதாவது:-

எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வகையில், கர்நாடக சட்டசபையில் எல்லைப் பிரச்சினை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியது கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தில் மராத்தி மொழி அதிகம் பேசும் பெலகாவி, கார்வார், பீதர், நிப்பானி, பால்கி ஆகிய நகரங்கள் மற்றும் 865 கிராம மக்களுடன் துணை நிற்க மராட்டிய அரசு உறுதிபூண்டுள்ளது. மேற்கண்ட பகதிகளை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும். அவற்றின் ஒவ்வொரு அங்குல நிலத்தை கூட பெற சுப்ரீம் கோர்ட்டில் சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒருமனதாக நிறைவேறியது

இந்த தீர்மானம் மீது உறுப்பினர்கள் பலர் காரசாரமாக பேசினர். இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு பெலகாவி பகுதி பாம்பே மகாணத்தின் கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story