மும்பை அருகே ரூ.8 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்


மும்பை அருகே ரூ.8 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
x

மும்பை அருகே ரூ.8 கோடி அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

மும்பையை அடுத்த தானே கோட்பந்தர் சாலை வழியாக கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விகாஸ் கோட்கேவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று காலை 10.40 மணி அளவில் கோட்பந்தர் நுழைவு பகுதியான காய்முக் சவுபாட்டியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் காரில் சோதனை போட்டனர்.

ரூ.8 கோடி கள்ளநோட்டுகள்

இதில் பண்டல் பண்டல்களாக பணநோட்டுகள் இருந்ததை கண்டனர். 400 பண்டல்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்ததை பறிமுதல் செய்தனர். பண நோட்டுகளை ஆய்வு செய்தபோது அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என கண்டறியப்பட்டது. மேலும் எண்ணி பார்த்தபோது ரூ.8 கோடிக்கு கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காரில் இருந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பெயர் ராம்ஹரி சர்மா (வயது52), ராஜேந்திர காரட் (58) என்பது தெரியவந்தது.

மற்றொருவருக்கு வலைவீச்சு

இவர்கள் பால்கர் மாவட்டத்தில் உள்ள ராம்ஹரி சர்மாவிற்கு சொந்தமான இடத்தில் மதன் சவுகான் என்பவரின் உதவியுடன் கள்ளநோட்டுகளை அச்சிட்டு உள்ளனர். பின்னர் அந்த கள்ளநோட்டுகளை தானேயில் புழக்கத்தில் விட காரில் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மதன் சவுகான் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

சமீப காலமாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத நிலையில், அவற்றை கள்ள நோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றபோது ஆசாமிகள் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story