மல்லிகார்ஜுன கார்கேவின் நிறம் குறித்து கேலி செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ.


தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நிறம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அரக ஞானேந்திரா கேலி செய்தார். பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நிறம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அரக ஞானேந்திரா கேலி செய்தார். பின்னர் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகள் கிளம்பின

மேற்கு தொடர்ச்சி மலை விவகாரத்தில் வனத்துறை மந்திரி ஈஸ்வா் கன்ட்ரேயின் கருத்தை கண்டித்து பா.ஜனதாவை சோ்ந்த முன்னாள் மந்திரி அரக ஞானேந்திரா எம்.எல்.ஏ. தலைமையில் சிவமொக்காவில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அரக ஞானேந்திரா, வட கர்நாடகத்தினருக்கு வனம் குறித்து எதுவும் தெரியாது என்றும், அங்கு உள்ளவர்களுக்கு தலைமுடியே நிழலாக உள்ளது என்றும், அங்குள்ளவர்களின் நிறமே கருப்பாக தான் இருக்கும் என்றும், உதாரணத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நிறமும் அப்படி தான் உள்ளது என்றும் கூறினார்.

இதன் மூலம் அவர் மல்லிகார்ஜுன கார்கேவை நிற கேலி செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அவரது கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அவரது இந்த கருத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவன் அருகே ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அரக ஞானேந்திராவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், அரக ஞானேந்திராவை நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் என்று காட்டமாக கூறினார்.

வருத்தம் தெரிவிக்கிறேன்

இந்த நிலையில் தான் கூறிய கருத்துக்காக அரக ஞானேந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், 'அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பழுத்த அரசியல்வாதி. நல்ல அனுபவம் கொண்டவர். அவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உள்ளது. தவறான நோக்கத்தில் அவர் குறித்து பேசவில்லை. அவரது பெயரையே பயன்படுத்தவில்லை. ஒருவேளை நான் கூறிய கருத்தால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

1 More update

Next Story