இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி


மம்தா பானர்ஜி
x

முகேஷ் அம்பானியின் மகன் திருமணம் நிகழ்ச்சிக்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மும்பை சென்றுள்ளார்.

மும்பை,

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த- ராதிகாமெர்சண்ட் திருமணம் நாளை மும்பையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் முகேஷ் அம்பானி அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

இதையடுத்து மராட்டியத்திற்கு வரும் மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முகேஷ் அம்பானி இல்ல திருமணத்தில் பங்கேற்கிறார். அதன் பின், இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத்பவார், உத்தவ் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்கிறார்.

மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்தியா கூட்டணி தலைவர்களை முதன்முறையாக மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை சென்ற மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மும்பை செல்கிறேன். முகேஷ் ஜி, நீதா ஜி அகியோர் என்னை திருமணத்திற்கு வருமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர். பலமுறை கேட்டுக்கொண்டதால் திருமணத்தில் பங்கேற்க இருக்கிறேன். வங்காளத்தின் அழைப்பின் பேரில் முகேஷ் அம்பானி ஜி பிஸ்வா பங்களா மாநாட்டில் பலமுறை கலந்துகொண்டுள்ளார். சரத்பவார்,உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்திக்க உள்ளேன். அகிலேஷ் யாதவ் நாளை மும்பை வர உள்ளார். அவரையும் சந்திக்க உள்ளேன் என்றார்.


Next Story