காவிரியில் நீர் திறப்பதை கண்டித்து மண்டியா விவசாயிகள் போராட்டம்


காவிரியில் நீர் திறப்பதை கண்டித்து மண்டியா விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கர்நாடகம் மட்டுமின்றி கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மக்களின் குடிநீர் தேவையை காவிரி பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், காவிரி படுகையில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. கபினி அணை மட்டும் நிரம்பியது.

இதில் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த ஆண்டு சரியான மழை பெய்யாததால் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டது.

இதனால் காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் போதாது என்றும், குறுவை சாகுபடிக்காக காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் தமிழக அரசு வலியுறுத்தியது. மேலும் தமிழக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து கடந்த சில தினங்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகள், விவசாயிகள், பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள் கே.ஆர்.எஸ். அணை முன்பும், மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் என இரு பிரிவாக போராட்டம் நடத்தினர்.

கே.ஆர்.எஸ். அணை முன்பு நடந்த போராட்டத்தில் மேல்கோட்ைட தொகுதி சர்வோதயா கட்சி எம்.எல்.ஏ. (காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ.) தர்ஷன் புட்டண்ணய்யா கலந்துகொண்டார். அவர்கள் மாநில அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். மேலும் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இதேபோல், மண்டியா கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு மற்றொரு தரப்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களும் மாநில அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் இங்குள்ள அணைகள் நிரம்பாமல் உள்ளது. இங்குள்ள விவசாயிகளுக்கே தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது, கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை உடனே நிறுத்த வேண்டும்.

நமக்கு விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. குடிநீருக்கு தண்ணீர் பற்றாகுறையாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் திறப்பது அவசியமா?. நமது விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் அரசு செயல்படுகிறது. கன்னடர்களை ஏமாற்றி தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டு அரசியல் பேரம் நடக்கிறது. இது காங்கிரசின் இன்னொரு உத்தரவாதமா?. தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்றார்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் நேற்று வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 110 அடி (மொத்த கொள்ளளவு 124.80 அடி) தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,067 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 15,187 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபிலா ஆற்றின் குறுக்கே கபினி அணை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று காலை 2,279.54 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,911 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,825 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு வினாடிக்கு 22,009 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 21,964 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story