காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் பெண்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்


காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் பெண்கள், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
x

காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் பெண்கள், விவசாயிகள், ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டியா:

காவிரி ஒழுங்காற்று குழுவை கண்டித்து மண்டியாவில் பெண்கள், விவசாயிகள், ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி நீர் விவகாரம்

காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக கர்நாடகம்-தமிழகம் இடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தொடர்ந்து 15 நாட்கள் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று கர்நாடக அரசு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட்டது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர், கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், பெங்களூருவில் இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது. இதையடுத்து மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை கண்டித்து, விவசாயிகள் கடந்த 4 நாட்களாக மண்டியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

5-வது நாளாக போராட்டம்

இந்தநிலையில் 5-வது நாளான நேற்று மண்டியாவில் விவசாயிகள் சங்கத்தினர், ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சர் எம்.விசுவேஸ்வரய்யா சர்க்கிளை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பெண் விவசாயிகளும் பங்கேற்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், மண்டியாவில் 7 தாலுகாக்கள் குடிநீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. அதனை வறட்சி தாலுகாவாக அறிவித்து விளை பயிர்களை காப்பதுடன், குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த காவிரி நீர் பங்கிடுவதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். எக்காரணத்தை கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு தமது தரப்பு வாதத்தை முன் வைத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் உத்தரவை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர். இதனால் மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் போராட்டம்

இதேபோல தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, மைசூரு, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


Next Story