மணிப்பூர் விவகாரம்: பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது - விசாரணை அமைப்புகள் அதிரடி


மணிப்பூர் விவகாரம்: பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது -  விசாரணை அமைப்புகள் அதிரடி
x

வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இம்பால்,

மணிப்பூரில் கடந்த மே 3-ந்தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதன்பின்னரும், தொடர்ந்து வன்முறை சம்பவம் நீடித்து வருகிறது. ராணுவ ஆயுதங்களை ஒரு கும்பல் பறித்து சென்றது. இதனால், ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க ராணுவம் கோரிக்கை விடுத்தது. அரசும் அமைதி காக்கும்படி மக்களை வேண்டி கொண்டது.

இந்த சூழலில், மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் பெண்களை வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் இருந்து அவரது செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோ எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story