மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி


மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி
x

மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியில் 30-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.

மனதின் குரல்

பிரதமர் மோடியுடன், மக்கள் மற்றும் அனைத்து சமூகத்தினருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டதுதான், மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் உள்பட தனியார் தொலைக்காட்சி செயற்கைக்கோள் சேனல்கள் வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி 52 மொழிகளில் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டின் நலன் சார்ந்த விஷயங்கள், மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகளை நாட்டு மக்களிடையே எடுத்துச் செல்வதோடு, அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்.

மேலும் நாட்டு மக்களுக்கு தேவையான அறிவுரைகள், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது எப்படி?, உடல் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், நீர் பாதுகாப்பின் முக்கியத்துவம் என பல்வேறு விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

100-வது நிகழ்ச்சி

அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று நோயின்போது, அந்த நோய் பற்றி தெரியப்படுத்துவதற்கும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி பெரிதும் உதவியதாக சொல்லப்பட்டது. மேலும் தமிழ் இலக்கியம் மற்றும் மொழியின் ஆழம் பற்றியும் நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறும் தளமாகவும் மோடி பயன்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் மனதின் குரலின் 100-வது நிகழ்ச்சி வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதற்கேற்றாற்போல், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள், முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை பேசிய 99 நிகழ்ச்சிகளில், பெரும்பாலானவற்றில் தமிழ்நாட்டில் நடந்த சாதனை, முயற்சிகள், நிகழ்வுகள் பற்றியும், தமிழ் கலாசாரம் மற்றும் மொழியை ஊக்குவிக்கும் வகையிலும், அதன் செழுமையையும், ஆழத்தையும், சிறப்பையும் அவர் பாராட்டி பேசியுள்ளார்.

உடல் உறுப்பு தானம்

அதிலும் குறிப்பாக, கடந்த 2015-ம் ஆண்டு உறுப்பு தானம் செய்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இதுதவிர, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது பற்றியும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையை சேர்ந்த தைம்மாள் என்பவர், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, தேங்காய் விற்பனையில் இருந்து ரூ.1 லட்சம் கொடுத்தது குறித்தும், தஞ்சாவூர் பொம்மைகள் பற்றியும், உள்ளூர் நாட்டுப்புற கதைகளை விவரிக்கும் தமிழ்நாட்டின் வில்லுப்பாட்டு என்று கூறி, அதை பற்றியும், தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி மழைநீர் சேகரிப்பை மேற்கொள்ளும் யோசனைகள் பற்றியும் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story