பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படும்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

பெங்களூருவில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான புறநகர் ரெயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவதாகவும், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு

பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாளை(திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தருகிறார். பெங்களூரு கொம்மகட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேச உள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கொம்மகட்டா பகுதிக்கு நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்று பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.15 ஆயிரம் கோடி திட்டம்

கர்நாடகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. யஷ்வந்தபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொம்மகட்டாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். குறிப்பாக பெங்களூரு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெங்களூரு புறநகர் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த திட்டம் ரூ.15 ஆயிரம் கோடியில் தொடங்கப்படுகிறது. இதுதவிர புதிதாக 6 ரெயில் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

வெற்றிகரமாக நடத்தப்படும்

தாபஸ்பேட்டையில் இருந்து ஒசக்கோட்டை வழியாக பழைய மெட்ராஸ் ரோட்டை இணைக்கும் வகையில் இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டம் உள்ளது. பெங்களூரு மற்றும் மைசூருவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story