ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை


ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கு: மேலும் ஒருவரை கைது செய்த அமலாக்கத்துறை
x
தினத்தந்தி 9 April 2024 7:42 AM GMT (Updated: 9 April 2024 8:37 AM GMT)

ஜார்க்கண்ட் பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக இருந்தவர் ஹேமந்த் சோரன். போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை வாங்கி மோசடி செய்ததாகவும், இது தொடர்பாக பணமோசடியில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஹேமந்த் சோரன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த உடன் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் தற்போது ராஞ்சியில் உள்ள சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் போலியாக ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்து பணமோசடி செய்தது தொடர்பாக ஜார்க்கண்ட் வருவாய்த்துறை முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் பனு பிரதாப் என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் மேலும் ஒருவரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோச்சா தலைவரான ஹேமந்த் சோரனுக்கு ராஞ்சியில் உள்ள 8.86 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக முகமது சதாம் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட சதாம் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story